Aranmanai 3 Tamil Movie Review
அரண்மனை 3 பிளஸ், மைனஸ் ரிப்போர்ட்!
அரண்மனையில் சில அமானுஷ்யங்கள் சிறுவர்களுக்கு மட்டும் நடக்க, அதெல்லாம் ஒண்ணுமில்லை எனக் கடந்து போகிறார்கள் பெரியவர்கள்.
பல ஆண்டுகளாகத் திறக்காத கோயில் ரகசிய அறை ஒன்று திறக்கப்பட, கோர மரணங்கள் நிகழத் தொடங்குகின்றன.
பேய் இருக்குற அரண்மனைல சுந்தர் சி இல்லாம எப்படி? வழக்கம்போல், சுந்தர்.சி புதிய ரூபத்தில் உள்ளே வர... பேய் யார், பேயின் பிளாஷ்பேக் என்ன, பேயின் டிமாண்ட் என்ன, அதை சுந்தர் சி & சாமியார் குழுவால் கொடுக்க முடிந்தததா என்பதாக நீள்கிறது 'அரண்மனை 3'.
சரவணனாக ஆர்யா. சைக்கிளிங், ஜிம் என சார்பட்டாவுக்கு ஏற்றிய உடம்புடன் அப்படியே வருகிறார்.
படத்தின் விமர்சனம் என்றால், கதாநாயகனைப் பற்றி இரண்டு வரிகளாவது எழுத வேண்டும். ஆனால், அந்த அளவுக்குக்கூட படத்தில் ஆர்யாவுக்கு காட்சிகள் இல்லை.
'ஆமா, இங்க ஆர்யான்னு ஒரு தம்பி இருந்தாப்லயே அவர எங்க'ன்னு அவ்வப்போது தேட வைக்கிறார்கள்.
'காஞ்சுரிங்' படங்களின் நாயகர்கள் வாரன் தம்பதி என்பது போல, அரண்மனை தொடர் படங்களின் நாயகன் சுந்தர்.சி தான்.
சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் யார் மாறினாலும், பட்டாபி எம்.எஸ்.பாஸ்கர் மட்டும் அப்படியே தொடர்வார்.
அப்படியாக இந்தப் பாகத்திலும் சாக்ஷி அகர்வாலின் கணவராக பேய்களை விரட்ட அட்டெண்டஸ் போடுகிறார் சுந்தர் சி. அவர் வந்த பின்னர்தான், பேயைப் பற்றிய இன்வெஸ்டிகேசனே ஆரம்பிக்கப்படுகிறது.
சுந்தர் சி படங்களில் வரும் வழக்கமான துணை நடிகர்களை எல்லாம் ஒவ்வொருவராக பேய் காவு வாங்க, புதிர்களுக்கான விடையைக் கண்டுபிடிக்கிறார் சுந்தர்.சி.
பேய்ப் படங்களுக்கான புதிய வரவு வேல ராமமூர்த்தி. இந்த வாரம் வெளியான இரண்டு படங்களில் வேல ராமமூர்த்தி வருகிறார். இரண்டிலும் அவர் எப்போதும் ஏற்று நடிக்கும் வேடமில்லை என்பது ஆறுதல். ஆனால், என்ன செய்கிறார் என்பது கேள்விக்குறி.
சரி, நாயகிகள் செக்மெண்டுக்கு வருவோம். லாரன்ஸ் காமெடி ஹாரர் என்கிற ஜானரை உருவாக்கியது போல், சுந்தர்.சி உருவாக்கியிருப்பது கிளாமர் ஹாரர் ஜானர்.
அந்த வகையில் இந்தப் பாகத்தில் நாயகியாக ராஷி கண்ணா. ராஷியுடன் ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், மைனா நந்தினி என ஒரு குழுவை இறக்கியிருக்கிறார்.
காமெடிக்கு முதல் பாகத்தில் சந்தானம், இரண்டாம் பாகத்தில் சூரி, மூன்றாம் பாகத்தில் விவேக் & யோகி பாபு.
எல்லா பாகங்களைப் போலவே இதிலும் இலவச இணைப்பாக மனோபாலா. விவேக்கின் காமெடிகள் ஓகே ரகம். உருவக்கேலிகள் தவிர்த்து, சில காமெடி ஒன்லைனர்களில் யோகி பாபு சிரிக்க அண்ட் கோ சிரிக்க வைக்கிறது.
சத்யாவின் இசையில் லூப்பில் போட்டதுபோல், ஒரு எமோஷனல் பாடலை ஒலிக்கவிடுகிறார்கள்.
ஆனால், நமக்கோ பேய் எஃபெட்டுக்கான பின்னணி இசையைவிட, இந்தப் பாடல் அதிகம் பயமுறுத்துகிறது. ஹரிஹரனும், சங்கர் மகாதேவனும் இணைந்து தோன்றும் இறுதிப்பாடலில் ரஹ்மானின் 'மோனலிசா' பாடலின் சாயல்.
பாலிவுட் பாணியில் படம் முடிந்ததும் ஆட்டம்போட வைக்கும் பழக்கவழக்கத்தை இந்தப் பாகத்திலும் செய்திருக்கிறார் சுந்தர்.சி.
Source: vikatan.com
Post a Comment